சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
ஆகஸ்ட் 10, 2023 அன்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் அக்டோபர் 9 ஆம் தேதி திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து, விசாரணையை தள்ளிவைக்க கோரிய நிலையில், வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை தி.மு.க ஆட்சி காலத்தில், அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சா் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிர்வாக உத்தரவின்படி வழக்கு வேலூர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. போதிய ஆதாரங்களும் இல்லை எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து கடந்த ஜூன் 28- ஆம் தேதி வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஊழல் தடுப்புப் பிரிவு தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், குற்ற விசாரணை சட்டம் 391- ஆவது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்காக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்தார்.
வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் அளித்த விடுதலை உத்தரவை தானாக முன்வந்து சீராய்வு செய்ய முடிவெடுத்ததற்கான காரணங்களை கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கின் உண்மைகள் மற்றும் விசாரணை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது, குற்றவியல் நீதி அமைப்பைக் கையாளவும் மாற்றவும் முயற்சிக்கிறது என்று கூறினார்.
நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தான் தானாக முன்வந்து விசாரணையை துவக்கி அமைச்சர், அவரது மனைவி மற்றும் மற்றொரு குற்றவாளிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதனையடுத்து, விசாரணை மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டி.வி.ஏ.சி) மற்றும் அமைச்சர் பொன்முடி தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை மேலும் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இருப்பினும், செப்டம்பர் 14 அன்று மற்றொரு விரிவான உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி நடைமுறைப்படி, இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (அக்டோபர் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி சார்பில் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் எந்த நேரத்திலும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். எனவே, சீராய்வு மனு மீதான விசாரணையை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்குமாறு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், மறுசீராய்வு மனு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டால், மேல்முறையீடு தொடர முடியாது என்று கூறி நீண்ட ஒத்திவைப்பு வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். அதேநேரம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை குறித்து குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க, வழக்கை அக்டோபர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“