Chennai High Court postponed ADMK general council meeting case: அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் பின்பற்றப்படவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயணனும், ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர் குரு கிருஷ்ணக்குமாரும் வாதாடினர்.
அப்போது, கட்சி விதிகளின்படி பொது குழுவுக்கு தான் உச்சப்பட்ச அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கியபோதும் தேர்வு முறையில் மாற்றமில்லை. பொதுக்குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததில் தவறில்லை என இ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல் அளிக்காததால் செயல்பட முடியவில்லை என கூறுவது தவறு என ஓ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவை கூட்டக்கோரி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் விண்ணப்பிக்க முடியும், இது சம்பந்தமான விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் ஓ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டப்பட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது. கட்சியினரின் விருப்பத்தை ஏற்று நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருப்பார் என 2017ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
அப்போது நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்? பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என இ.பி.எஸ் தரப்பு விளக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் தமிழ் மகன் உசேன் கட்சி விதிகளின்படி நிரந்தர அவைத் தலைவராக நியமிக்கப்பட்டாரா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், பொதுக்குழுவின்போது கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு (ஆகஸ்ட் 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil