அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது தொடரப்பட்ட டெண்டர் முறைகேடு வழக்கில் இருந்து அவரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி வேலுமணி. இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் மாநகராட்சிகள் பணிகளில் டெண்டர் விட்டதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பதிவு செய்யப்பட்ட இந்த 2 வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அரசியல் காழ்புணர்ச்சியுடன் போடப்பட்ட இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று என எஸ்.பி வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை (நவம்பர் 30) இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.
எஸ்.பி. வேலுமணி தொடர்ந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி டீக்காராமன் அமர்வு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டனர். ஆனால், அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மட்டும் ரத்து செய்ய மறுத்துவிட்டனர். இதனால், சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற எஸ்.பி. வேலுமணியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை டெண்டர் முறைகேடு வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர் மீது தொடரப்பட்ட மற்றொரு வழக்கான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"