ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.
கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த எஸ்.டி.சிவஞானன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோவையில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் ஈஷா யோகா மையத்துக்கு வருகின்றனர். இந்த நிகழ்வால் வெள்ளியங்கிரி மலையின் இயற்கை வனச்சூழல் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் பங்கேற்க 7 லட்சம் பேருக்கு மேல் திரண்டதால் ஏற்பட்ட கழிவுநீர் வனப்பகுதிகளை மட்டுமின்றி, அருகில் உள்ள விவசாய நிலங்களையும் பாழ்படுத்தியுள்ளது. விடிய, விடிய நடைபெறும் நிகழ்வில் அரசு நிர்ணயம் செய்துள்ள 45 டெசிபல் ஒலி அளவை விட விதிகளை மீறி அதிகப்படியான ஒலி மாசு ஏற்படுத்தப்படுகிறது.
எனவே, ஈஷா யோகா மையத்தில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், வனச்சூழலை பாதிக்கும் வகையிலும், ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தும் வகையிலும் சிவராத்திரி விழாவை நடத்தக்கூடாது என ஈஷா யோகா மையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை (24.02.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழாவின் போது அனைத்து விதிகளும் பின்பற்றப்படுகின்றன என்று வாதிட்டார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இரவு நேரத்தில் ஒலிப் பெருக்கியை பயன்படுத்தினாலும் 12 மணிவரை பயன்படுத்த முடியும் என்று வாதிட்டார். இதற்கு, கழிவு நீர் மேலாண்மை மற்றும் ஒலி மாசுவை தவிர்க்க ஈஷா மையத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
இதையடுத்து, ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என்றும் மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லையெனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.