டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகள் இடமாற்றம் தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சி.வி. கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 2004 முதல் 2020-ம் ஆண்டு வரை மதுபான கடைகளின் எண்ணிக்கை 35 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது எனவும், மது விற்பனை நேரத்தை 12 மணி நேரமாக இருந்தது. மதுபான கடையின் பணி நேரத்தை 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாக ரீதியில் மதுபான கடைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
கிராம சபை கூட்டங்களில் 8 வழி சாலை, சிஏஏ, நீட் போன்ற மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிகாட்டிய அவர், கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசு பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் மதுபான கடைகள் அமைக்கும் முன், அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்பதை ஏன் சட்டமாக்க கூடாது என கேள்வி எழுப்பினார். டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் மக்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் வாக்குறுதிகளில் மதுவிலக்கு அமல்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வரும் கட்சிகள், அதன் பின் அதை கடைபிடிப்பதில்லை என்றும் மது விற்பனையை தடுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறையை வைத்து தமிழக அரசு மது விற்பனை செய்வதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
கடந்த 16 ஆண்டுகளில் மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என உறுதியாக கூற முடியுமா ?எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கான நடைமுறை குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் பிறப்பித்த சுற்றிக்கையை, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தமாக கொண்டு வருவது குறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"