தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் ஜுலை 29-ம் தேதி விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிக்கவும் நீதிபதி தமிழக அரசுக்கு உத்தவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், 2020 – 21-ம் ஆண்டு 39 ஆயிரத்து 760 கோடி ரூபாயும், 2021 – 22-ம் ஆண்டில் 42 ஆயிரத்து 421 கோடி ரூபாயும் விற்பனை செய்துள்ளதாக கூறிய டாஸ்மாக் நிர்வாகம், இந்த ஆண்டுகளில் முறையே 161 கோடி ரூபாயும், 69 கோடி ரூபாயும் இழப்பை சந்தித்ததாகக் கூறியுள்ளது. இதன் மூலம் லாபம், வேறு பக்கம் திருப்பி விடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள், பெரும்பாலும் ஆளுங்கட்சி. மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக உள்ளதால், டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில பிராண்டு மதுபானங்களை மட்டும் விற்கிறது. டாஸ்மாக்கில் ஊழல் நிலவுகிறது. சென்னை விமான நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை விட, வெளி மாநிலங்களில் மதுபானங்களின் தரம் சிறப்பானதாக உள்ளது. டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்கிறார்கள், இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர், துறை அமைச்சர் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது, மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும். மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு அமர்வு முன் திங்கள்கிழமை (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மதுபானங்களை ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது” என கேள்வியெழுப்பினர். மேலும், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்தும், டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் ஜுலை 29-ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.