நீதிமன்றம் உத்தரவிட்டும் குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி எல்லைகளை அளக்கும் பணிகளை 12 ஆண்டுகளாக மேற்கொள்ளாதது ஏன் என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கடும் வறட்சி தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.கடந்த 2004-2005-ஆம் ஆண்டுகளில் இதே போன்ற சூழ்நிலை நிலவிய போது தமிழகத்தில் உள்ள அனைத்து குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார 2005-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை செயல்படுத்தும் வகையில் தமிழக குளங்கள் பாதுகாப்பு சட்டம் கடந்த 2007-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவை இதுவரை அமல்படுத்தவில்லை என்று கூறி மாற்றம் இந்தியா அமைப்பின் தலைவர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நீதிமன்றம் உத்தரவிட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையிலும் இதுவரை அந்த பணிகளை அரசு மேற்கொள்ளவில்லை எனவே உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது,"தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் குளங்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிப்பு பணி மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழக அரசின் சட்டப்படி 32 மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி அளந்து அதன் எல்லை வரையறை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.
இதே கோரிக்கையுடன் ஒரு மனு நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மனுவுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.