மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்று காவல்துறை தெளிவுபடுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (20.02.2025) உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை வைத்திருந்தனர். பெரும்பாலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியோர் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிக அளவில் இங்கே முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனத்தின் நிரந்த வைப்பு நிதியாக ரூ.525 கோடியும், 300 கிலோ தங்கமும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நிறுவனத்தில் ரூ.24.5 கோடி மோசடி நடந்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகிய 3 பேரையும் ஆகஸ்ட், 2024-ல் போலீஸார் கைது செய்தனர். மேலும், சென்னையைச் சேர்ந்த சுதிர் சங்கர் (46) என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் திலக், புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முழுமையாக விசாரணை நிறைவடையவில்லை என கூறினார். எனவே, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேவநாதன் யாதவ் நிதி நிறுவனத்தில் பணத்தை செலுத்தி பாதிக்கபட்டுள்ளதால், ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் திலக் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி சுந்தர் மோகன் தேவநாதன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.