கோவையில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்ட வழக்கில், 20,000 முறை லாரிகளில் மண் அள்ளப்பட்டிருக்க வேண்டும், புலன் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை, மண் அள்ள அனுமதி அளித்தது யார் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோவையில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டது தொடர்பான அரசின் அறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், கோவையில் யானைகள் வழித்தடத்தில் அதிகளவில் மண் அள்ள அனுமதி வழங்கியது யார்?, அந்த மண் எங்கே? யாருக்காக கொண்டு செல்லப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கோவை வனப்பகுதியில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையில் 2023ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை சட்டவிரோதமாக மண் எடுத்தவர்களுக்கு ரூ.119 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அபராதம், கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் பட்டியலிடப்பட்டு இருந்தன. அதோடு தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அந்த அறிக்கையை ஆய்வு செய்தனர். கோவையின் மதுக்கரை, கரடிமடை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடங்களில் 5 லட்சம் கனமீட்டர் மண் அள்ளப்பட்டுள்ளதாக கூறி அதிருப்தி தெரிவித்தனர். அதோடு, இந்த மண்ணை 20 ஆயிரம் முறை லாரியில் ஏற்றி சென்று இருக்க வேண்டும். இதனால், புலன் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்று நீதிபதிகள் கவலையை பதிவு செய்தனர்.
மேலும் கோவையில் யானைகள் வழித்தடத்தில் அதிகளவில் மண் அள்ள அனுமதி வழங்கியது யார்?, அந்த மண் எங்கே? யாருக்காக கொண்டு செல்லப்பட்டது? மண் அள்ளியதால் ஏற்பட்ட குழிகள், சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று நீதிபதிகள் சரமாரியமாக கேள்வி கேட்டனர். அதேபோல் செங்கல் சூளைகளை மூடும்போது அங்கிருந்து மண் மற்றும் செங்கற்களை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டப்போதும் பறிமுதல் செய்யப்பட்டதா? இல்லையா? என்பது பற்றிய கேள்வி எழுப்பினர்.
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஓராண்டுக்கு மேல் பணி செய்யவில்லை என்பதன் மூலம் இது திட்டமிட்ட செயலாக உள்ளது. கனிம வளத்துறை அதிகாரிகளின் உடந்தை இல்லாமல் இவ்வளவு மண் எடுத்திருக்க முடியாது. இந்த பகுதிகளில் மண் அள்ளும் நடவடிக்கையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறினர். இந்த கேள்விகளுக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவிந்திரன் பதிலளித்தார். அப்போது அவர், ‛‛இந்த மண் எடுத்தது யார்? மண் யாருக்கு கொடுக்கப்பட்டது? பயனாளிகள் யார்? என்பதை மாவட்ட ஆட்சியர் வழியாக அறிக்கையாக தாக்கல் செய்கிறோம். இந்த விஷயத்தில் அரசு வேடிக்கை பார்க்காது. எதிர்காலத்தில் மண் எடுப்பதை தடுக்க தொழில்நுட்ப உதவிகளையும் நாட உள்ளோம்'' என்றார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.