Chennai High court refused Kallakuruchi girl student’s father’s request: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் மாணவியின் தந்தை வைத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி மாணவி விடுதியின் 2-வது மாடியிலிருந்து குதித்து மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்களும் உறவினர்களும் சந்தேகங்களை எழுப்பினர்.
இதையும் படியுங்கள்: தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாமே? ஐகோர்ட் கேள்வி
இதனிடையே, பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி, மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின், பிரேத பரிசோதனை அறிக்கை ஜூலை 16 ஆம் தேதி வெளியான நிலையில், அந்த அறிக்கை போலியானது என்று கூறி மாணவியின் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இருப்பினும், மாணவியின் பெற்றோர், மகளின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். இதனிடையே, சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு, நீதி கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம், கல்வீச்சு, பேருந்துகளுக்கு தீவைப்பு என கலவரமாக மாறியதால் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றிலுமாக சேதப்படுத்தினர். இதுவரை கலவரம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய கோரி, மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும் மாணவியின் தந்தையின் கோரிக்கையான, தாங்கள் கூறும் மருத்துவர்களை பிரேத பரிசோதனை செய்ய நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. மேலும் நீதிபதியே சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்களை பிரேத பரிசோதனை நிபுணர்களாக நியமித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற தடயவியல் துறை இயக்குனர் தலைமையில், இந்த பிரேத பரிசோதனை நடைபெற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த மறுபிரேத பரிசோதனை முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுதாரரான மாணவியின் தந்தை தனது வக்கீலுடன் மறுபிரேத பரிசோதனை நடைபெறும்போது இருக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்ய சிறப்பு படையை அமைக்க தமிழக டி.ஜி.பி-க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை ஜூலை 29 ஆம் தேதி தாக்கல் செய்யவும் டி.ஜி.பி-க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற இயற்கைக்கு முரணான மரணம் தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தங்கள் தரப்பில் குறிப்பிடக்கூடிய மருத்துவ நிபுணரை நியமிக்கும் வரை மறு பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் மாணவியின் தந்தை ராமலிங்கம் முறையீடு செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil