அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் இருந்து மொழி வாரி சிறுபான்மையினருக்கு விலக்கு அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்கிறது. இதில் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். மொத்தம் 41,485 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இந்தநிலையில் மொழி வாரி சிறுபான்மையினருக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வி.பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
தெலுங்கு மொழி சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவரான மனுதாரர், தமிழ் மொழித் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோரிக்கையை ஏற்கவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம், 2016 இன் பிரிவு 21, பணி நியமனம் கிடைத்த பிறகு தமிழ்த் மொழித் தாளில் தேர்ச்சி பெற இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளித்தது. ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள்) திருத்தச் சட்டம், 2023 - 21-A-ஐச் சேர்க்க இந்தப் பிரிவில் செய்யப்பட்ட திருத்தம், இரண்டு ஆண்டு கால அவகாசத்தை நீக்கியுள்ளது. எனவே நியமனம் கிடைத்த பின்னர் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டு கால அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இப்போது மனுதாரர்களின் வாதங்களை பரிசீலிக்க முடியாது என்று கூறியது. இந்த நிலையில், இடைக்கால உத்தரவை பிறப்பிப்பது தேர்வு செயல்முறையை சீர்குலைக்கும். எனவே மனுதாரர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பெஞ்ச் கூறியது. மார்ச் 7 ஆம் தேதிக்குள் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு பதிலளித்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பெஞ்ச், மனுவை மார்ச் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“