Advertisment

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டது; பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது – இபிஎஸ் தரப்பு; பொதுக்குழு முடிவு தொண்டர்களின் விருப்பமல்ல – ஓ.பி.எஸ் தரப்பு; அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

author-image
WebDesk
New Update
AIADMK general council meeting case, o panneerselvam, edappadi k palaniswami, chennai high court, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு, ஐகோர்ட் தீர்ப்பு, நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்பு வாதம், ஐகோர்ட் இடைக்கால உத்தரவு, AIADMK general council meeting, OPS vs EPS aguement, chennai high court interim order soon

Chennai High Court reserved ADMK general council meeting case judgement: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

Advertisment

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்றும் இன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது இ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயணனும், ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர் குரு கிருஷ்ணக்குமாரும் வாதாடினர்.

இதையும் படியுங்கள்: இந்து மதத்தை தூக்கி பிடிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான் – கே.எஸ். அழகிரி

நேற்று, கட்சி விதிகளின்படி பொது குழுவுக்கு தான் உச்சப்பட்ச அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததில் தவறில்லை என இ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேநேரம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல் அளிக்காததால் செயல்பட முடியவில்லை என கூறுவது தவறு. பொதுக்குழுவை கூட்டக்கோரி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் விண்ணப்பிக்க முடியும், இது சம்பந்தமான விதிகள் பின்பற்றப்படவில்லை என ஓ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், பொதுக்குழுவின்போது கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை இன்றைக்கு (ஆகஸ்ட் 11) ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது, அ.தி.மு.க பொதுக்குழு விதிப்படி கூட்டப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11- ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இது சம்பந்தமான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27- ஆம் தேதியே தயாரிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என இ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதி ஆனது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது. இரட்டை தலைமை தேவையில்லை என்றும், ஒற்றைத் தலைமையை விரும்புவதாகவும் 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் அளித்துள்ளனர். மற்ற கட்சிகள் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.,வில் தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயகபூர்வமாக நடத்தப்பட்டுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் கட்சியை வழி நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர். அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள். பொதுக்குழு உறுப்பினர்களின் பதவி காலாவதியாகவில்லை. எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி செல்கின்றன. ஒருவரின் விருப்பத்தை பார்க்காமல் மொத்த கட்சியின் நலனை பார்க்க வேண்டும் என இ.பிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர், ஓ.பி.எஸ் தரப்பில் வாதிடும் போது, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக எந்த தீர்மானமும் ஜூன் 23 பொதுக்குழுவில் முன் வைக்கப்படவில்லை. காலி இடத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க. தலைமை இடத்தை பிடிக்க முயன்றனர் என வாதிடப்பட்டது.

அப்போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உள்ளார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, 2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை மட்டும் வைத்து, ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது. பொதுக்குழு குறித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை மூலம் தெரிந்து கொள்ள முடியாது. முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் 2 நாட்களாக கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். மேலும், இருதரப்பினரின் தகுந்த ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Admk Ops Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment