அ.தி.மு.க உள்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கில், பிப்ரவரி 12-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்த வழக்கில், “கட்சியில் எந்த பிளவும் இல்லை, கட்சியில் தனக்கான ஆதரவு நீடிப்பதில் எந்த மாற்றமும் இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 7) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கல்யாண சுந்தரம், “உட்கட்சி விதிகளில் திருத்தம் செய்தது. புதிய சட்டத் திட்டங்களை கொண்டு வந்தது தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. கட்சியில் எந்த பிளவும் இல்லை. அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு நீடிக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்” என என்று வாதிட்டார்.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் தரப்பில், “அ.தி.மு.க-வில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஓ.பி.எஸ் பக்கம் உள்ளனர். இது சம்பந்தமாக விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க முடியாது.” என்று வாதிடப்பட்டது.
இதை தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கபப்ட்ட தடையை நீக்ககோரிய மனுக்கள் மீது பிப்ரவரி 12-ம் தேதி ஐகோர்ட் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.