/indian-express-tamil/media/media_files/2025/08/13/chennai-hc-sanitary-worker-protest-2025-08-13-13-35-58.jpg)
தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தர தடையில்லை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாநகராட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் வழங்கக் கோரிய வழக்கு தொழில் தகராறு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது. அதற்கு தொழில் தகராறு தீர்ப்பாயத்தின் அனுமதியை பெற வேண்டும். மாநகராட்சியின் நடவடிக்கையால் 2,000 தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களை குப்பைகளை போல தூக்கி எறியக்கூடாது என வாதிடப்பட்டது.
அப்போது மாநகராட்சி தரப்பில், தூய்மைப் பணியாளர்கள் வேலையைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். ஒப்பந்ததாரர் மூலம் பணி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணி ஏற்கெனவே தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டன. தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2,000 தூய்மைப் பணியாளர்களுக்கும், ஒப்பந்த நிறுவனம், அதிக ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு உள்ளிட்ட சலுகைகளுடன் வேலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்த நிறுவனம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இந்த முடிவில் விதிமீறல் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். இதுவரை 341 பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயிரத்து 900 பணியாளர்கள் தேவை என்ற நிலையில், பணிக்கு சேர்வதற்கான கால அவகாசத்தை ஆக. 31-ம் தேதி வரை நீட்டிக்க தயார் எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கை தீர்ப்புக்காக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சுரேந்தர், சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார். தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலையே எழவில்லை. சென்னை மாநகராட்சி, ஒப்பந்ததாரர் நிறுவனத்துடன் கலந்து பேசி தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.