மத்திய அரசின் புதிய சட்டங்கள் மக்களை குழப்பும் வகையில் உள்ளது. சட்டங்களை கொண்டுவவதற்கு முன்பு சட்ட ஆணையத்திடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை நடைமுறையில் இருந்த இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய 3 சட்டங்களையும் மாற்றிய மத்திய அரசு, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, மற்றும் பாரதியா சாக்ஷியா சட்டம் 2023 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் பலரும் இந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். மேலும் இந்த சட்டங்கள் சாதாரண மக்களுக்கு புரியாத வகையில் உள்ளது என்றும், கருத்துக்கள் வெளியான நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையாக விவாதங்கள் எதுவும் இல்லாமல், மாநிலங்களில் கருத்துக்களை கூட கேட்காமல் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. சட்டங்களை கொண்டுவரும் முன் சட்ட ஆணையத்திடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்று கூறி, இந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“