சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தாம்பரம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தக் காலம் 2019-ல் முடிவடைந்துவிட்டது. ஆனாலும், அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதை தடை செய்ய வேண்டும் என்று திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதாக இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும், தமிழக சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டனர். சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கையை பின்பற்ற வேண்டும். சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் இல்லாத வகையில் மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"