மத்திய அரசால் மாணவர் சேர்க்கைக்கு தடை செய்யப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் வகையில், தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் விவரங்களை தாக்கல் செய்யும்படி, தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், 2016- 17 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லூரியில், 110 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாததால், 2017-18, 2018-19 ஆம் கல்வி ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை நடத்த இக்கல்லூரிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதுதவிர, இக்கல்லூரி இந்தியன் வங்கிக்கு 392 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளதால், கல்லூரி சொத்துக்களை ஏலம் விட வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்லூரியுடன் இணைந்துள்ள மருத்துவமனையும் மூடப்பட்டுள்ளதால் தற்போது அங்கு படிக்கும் 110 மாணவர்களும், தங்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவுக்கு பதிலளித்த கல்லூரி நிர்வாகம், கல்லூரியை புதுப்பிக்க அகில இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்ந்து மறுத்து வருவதால், கல்லூரியை மூடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால், தற்போது படிக்கும் 110 மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்ற தமிழக அரசை கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சுகாதார துறை செயலாளர், சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் அளிக்கபட்டது. அதில் ஏற்கனவே மற்றொரு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 150 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துள்ளதால், இந்த மாணவர்களை சேர்த்துக் கொள்ள இயலாது எனவும், இவர்களை தனியார், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர், மத்திய சுகாதாரத் துறை செயலாளருக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அனுப்பிய கடிதத்தை அரசுத்தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், எத்தனை மாணவர்களை அந்த கல்லூரிகளில் சேர்க்க முடியும் என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி சுந்தர், விசாரணையை அக்டோபர் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.