அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி, காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அங்கு செம்புலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 25-ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த செம்புலிங்கம், திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 8-ம் தேதி மரணமடைந்தார்.
போலீசாரின் தாக்குதலில் செம்புலிங்கம் இறந்ததால், இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி, செம்புலிங்கத்தின் உறவினர் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "மாநில போலீசார் சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்கை அவர்களே விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது செம்புலிங்கத்திடம் பெற்ற வாக்குமூலத்துக்கு முரணாக வேறு வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையை திரிக்கும் வாய்ப்புள்ளதால் தடயவியல் மருத்துவ துறை நிபுணர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இதையும் படியுங்கள்: அரியலூரில் போலீஸ் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு.. கடும் நடவடிக்கை எடுக்க பா.ம.க. கோரிக்கை
இந்த மனு, அவசர வழக்காக நீதிபதி சந்திரசேகரன் வீட்டில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, "ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணர் டிக்காலை பிரேத பரிசோதனை குழுவில் சேர்க்க வேண்டும்" என கோரினார்.
அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் சந்தோஷ், "கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் தங்கள் தரப்பு மருத்துவர்களை வைத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்துள்ளது" என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தஞ்சை, திருச்சி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்கள் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) 12 மணிக்குள் பிரேத பரிசோதனையை முடித்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அமைதியான முறையில் இறுதி ஊர்வலத்தை நடத்தவும் உத்தரவிட்ட நீதிபதி, உயிரிழந்தவரின் வீட்டுக்கும் போதுமான பாதுகாப்பை வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விவசாயி செம்புலிங்கம் மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார். இதனால் இன்றே திருச்சி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.