சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைக் கொண்டு வந்து, பேரவையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பு அளித்துள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து, சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்களும் இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக 21 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், உரிமைக்குழு நோட்டீசுக்கு தடை விதித்தது. இந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலாளா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘உரிமைக்குழு நடவடிக்கையில் பாரபட்சம் இல்லை. பேரவைத் தலைவரின் அனுமதி பெறாமல் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சபைக்குள் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் கொண்டு வந்துள்ளனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. இதனிடையே, 21 திமுக தரப்பில், எம்.எல்.ஏ.க்களில் தரப்பில் ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோா் இறந்து விட்டதாலும், கு.க.செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, எஞ்சிய 18 போ் சாா்பில் மூத்த வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி, ஆா்.சண்முகசுந்தரம், என்.ஆா்.இளங்கோ ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.
அரசு தலைமை வழக்கறிஞா் விஜய் நாராயண் தமிழக அரசின் சட்டப்பேரவைச் செயலா் சார்பிலும் சட்டப்பேரவை உரிமை மீறல் குழு சாா்பில் அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞா் ஏ.எல்.சோமயாஜி ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.
அதே போல, எம்.எல்.ஏ கு.க.செல்வம் தரப்பில் இந்த வழக்கில் திமுகவின் வாதத்தையே தனது வாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என வாதிடப்பட்டது. இறுதி விசாரணையில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனா்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு, தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து, சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்து இன்று காலை தீா்ப்பளித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"