தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கூறப்படும் புகாரில், ஓய்வுபெற்ற டி.ஜி.பி நடராஜூக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது என்று கூறி தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வர் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஓய்வுபெற்ற டி.ஜி.பி.,யுமான ஆர்.நடராஜ் மீது தி.மு.க வழக்கறிஞர் ஷீலா என்பவர் திருச்சி எஸ்.பி.,யிடம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் ஆர்.நடராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் டி.ஜி.பி நடராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக நடந்தது. அப்போது நடராஜ் தரப்பில் அதே வாட்ஸ்-அப் குழுக்களில் தன்னைப்பற்றியும் அவதூறாக விமர்சித்து வருவதாகவும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஓய்வுபெற்ற டி.ஜி.பி நடராஜூக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அதுவரை நடராஜ் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை வரும் ஜனவரி 19 ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“