சென்னை உயர் நீதிமன்றத்தில் மே மாதம் 1-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை கோடைகால விடுமுறையை முன்னிட்டு அவசர வழக்குகளை விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு மே 1 ம் தேதி முதல் ஜூன் 3 ம் தேதி வரை கோடைகால விடுமுறையாகும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மே மாதத்தில் 02 மற்றும், 07, 08 ஆகிய தேதிகள், இரண்டாம் வாரத்தில் 14, 15 தேதிகள், மூன்றாம் வாரத்தில் 21, 22 தேதிகள், நான்காம் வாரத்தில் 28, 29 ஆகிய தேதிகளில் வழக்கு மனு தாக்கல் செய்யலாம். இதைத் தொடர்ந்து வரும் நாட்களில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த காலத்தில், அவசர வழக்குகளை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, சென்னை ஐகோர்ட்டில் ஏப்ரல் 29 முதல் மே 6 ம் தேதி வரை நீதிபதிகள் பாரதிதாசன், சேஷசாயி, ஜெயச்சந்திரன், ராமலிங்கம், பூங்கியப்பன் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பார்கள்.
மே 7 முதல் மே 13 ம் தேதி வரை நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு, சுப்பிரமணியம், ராமலிங்கம், பூங்கியப்பன் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பார்கள். மே 14 முதல் மே 20 வரை நீதிபதிகள் சுப்பிரமணியம், தண்டபாணி, கார்த்திகேயன், ராஜமாணிக்கம், ஹேமலதா ஆகியோரும், மே 21 முதல் 27 வரை நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன், பவானி சுப்புராயன், ராஜமாணிக்கம், ஹேமலதா ஆகியோரும் வழக்குகளை விசாரிப்பார்கள்.
மே 28 முதல் ஜூன் 3 ம் தேதி வரை நீதிபதிகள் பாஸ்கரன், அப்துல் குத்தூஸ், டீக்காராமன், சதீஷ்குமார், மற்றும் ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.
மதுரை ஐகோர்ட்டு கிளையில், ஏப்ரல் 29 முதல் மே 6 ம் தேதி வரை நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், பசீர் அகமது, ஆர். தாரணி ஆகியோரும், மே 7 முதல் மே13 ம் தேதி வரை நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர். சுவாமிநாதன், ஆர்.தாரணி ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.
மே 14 முதல் மே 20 வரை நீதிபதிகள் எம். சுந்தர், அனிதா சுமந்த், எம்.எஸ். ரமேஷ் ஆகியோரும், மே 21 முதல் 27 வரை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர். சுரேஷ்குமார், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோரும், மே 28 முதல் ஜூன் 3 ம் தேதி வரை நீதிபதிகள் எம்.வி. முரளீதரன், ஜே. நிஷாபானு, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோரும் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல்களை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது.
ஓ.பன்னீர்செல்வம் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. எனவே டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை. எனவே டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கோடை விடுமுறைக்கு பிறகே தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.