AIADMK coordinator and joint coordinator election : அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை அதிமுக பொதுக்குழு மூலமாக தேர்வு செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தது. டிசம்பர் 1ம் தேதி அன்று நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தில் இனி அடிப்படை உறுப்பினர்களே இவ்விரு பதவிகளுக்குமான தலைவர்களை தேர்வு செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிமுக விதிகள் மாற்றப்பட்டது. பொள்ளாச்சி ஜெயராமன், பொன்னையன் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு டிசம்பர் 7ம் தேதி அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
டிச.7-ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் – ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு
இந்நிலையில் இந்த பதவிகளுக்கான தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அவசர வழக்காக இதனை விசாரிக்க ஒப்புக் கொண்டது சென்னை உயர் நீதிமன்றம். கே.சி. பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் வேண்டுகோள்களுக்கு மாறாக விதிமுறைகள் மாற்றப்பட்டு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களுக்கு 21 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு தர வேண்டும் ஆனால் டிசம்பர் 1 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டு 7ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இது பொதுச்செயலாளரின் அதிகாரங்களை அபகரிக்கும் முயற்சி என்றும், தேர்தலில் வாக்களிக்க தகுதிவாய்ந்த உறுப்பினர்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவில்லை என்றும் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார் கே.சி. பழனிசாமி.
உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு பட்டியலிடப்பட்ட இந்த வழக்கு இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. இதில் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, அதிமுக ஒருங்கிணைப்பாளார் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நிர்வாகிகள் தேர்வு வரை சட்ட விதி மீறல்கள் நடந்திருந்தால் தேர்தல் முடிவுகள் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ள நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பானர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் அதிகாரி பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஜனவரி 7-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil