கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்த சகாயம் குழுவை கலைப்பது தொடர்பாக 31ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சகாயம் ஐஏஎஸ் மதுரை கலெக்டராக இருக்கும் போது, கிரானைட் முறைகேடு தொடர்பான அறிக்கையை தயார் செய்தார். இந்த விசயம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிய வந்ததும், அவரை அக்கிருந்து இடமாற்றம் செய்தனர். அடுத்து வந்த கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, கிரானைட் மோசடி குறித்து தொடர்ந்து விசாரித்தார். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை தருமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, சகாயம் குழு விசாரணை நடத்தி ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடுகள் நடத்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில் சகாயம் குழுவில் இடம்பெற்ற ஓய்வு பெற்ற தாசில்தாரர் மீனாட்சி சுந்தரத்துக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழுவுக்கு மொத்தம் 53 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு, கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்தது. ஒய்வு பெற்ற தாசில்தாரின் சம்பளம் உள்பட சகாயம் குழுவிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை முழுவதும் வழங்கபடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் குழுவை கலைப்பது தொடர்பாக சகாயம் குழுவே தெரிவித்துள்ளது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து குழுவை கலைப்பது தொடர்பாக வரும் 31 தேதி முடிவு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, சகாயம் குழுவிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை முழுவதையும் ஜூலை 31 ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் குழு சமர்பிக்க வேண்டிய கூடுதல் ஆவணங்களை சீல் வைக்கப்பட்ட கவரில் பதிவு துறையில் தாக்கல் வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 31 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.