நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தலையிட்டதாக ஐசரி கணேஷ் உள்ளிட்ட இருவரை, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடத்துவதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிடக் கோரி சங்க பொதுச்செயலாளர் விஷால் தொடர்ந்த வழக்கை, ஜூன் 22ம் தேதி அவசர வழக்காக, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அதன்பின், தேர்தல் நடத்த தேவையான பாதுகாப்பை வழங்க சென்னை மைலாப்பூர் போலீஸ் துணை கமிஷனருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாம்.இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தால், ஜூன் 23ல் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போகும் என அனந்தராமன் என்பவர் ஜூன் 22ம் தேதி மாலை 4.20 மணிக்கு தொலைபேசி மூலமாக நீதிபதியை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் மாலை 4.45 மணிக்கு நீதிபதி வீட்டிற்கு நேரிலும் வந்து வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
நடிகர் சங்கம் நிதிநெருக்கடியில் இருந்த காலத்தில் மிகவும் உதவிகரமாக ஐசரி கணேஷ் இருந்ததால், அதற்கு கைமாறாக வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து தேர்தலை தள்ளிவைக்கும்படி ஐசரி கணேசுக்காக, அனந்தராமன் தன்னை அணுகியதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி இதன்காரணமாக, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். நீதி விசாரணை நடைமுறையில் முறைகேடாக தலையிட்ட ஐசரி கணேஷ், அனந்தராமன் இருவரையும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஏன் தண்டிக்கக்கூடாது என்பது குறித்து இருவரும் நான்குவாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.