முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை தொடர்புப்படுத்தி செய்திகள் வெளியிட கருத்து தெரிவிக்க தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்தியூ உட்பட ஏழு பேருக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு தோட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தம்மை தொடர்புப்படுத்தி தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், ஜிபின் பொலியன் குடான், சிஜியா அனில், ஷிவானி, ராதாகிருஷ்ணன், சயன், வயலார் மனோஜ் ஆகியோர் தமக்கு எதிராக ஆதாரமில்லாமல் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் ஆவணப் படங்களை வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலமாக தனது பதவிக்கும், பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளனர். எனவே இதற்காக சம்பந்தப்பட்ட 7 பேர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடாக தமக்கு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் தமக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு கடந்த 23 ஆம் தேதி நீதிபதி கே. கல்யாணசுந்தரத்திடம் முன் விசாரணைக்கு வந்தத போது, மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேர் முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக பேசவும், கருத்து தெரிவிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவு நகல் இன்னும் எதிர் மனுதாரர்களுக்கு சென்றடையவில்லை எனத் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைப்பதாக தெரிவித்தார்.
மனுதரார் தரப்பில் ஏற்கனவே நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை நீடிக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணை 4 வாரத்திற்கு தள்ளிவைப்பதாகவும், மனு தொடர்பாக மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேர் பதில் அளிக்க வேண்டும். ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாகவும். இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.