TNPSC group 1 case today news: கேள்வித்தாள் குளறுபடி, வெளிப்படைதன்மை இல்லாமல் நடைபெற்ற குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மனுவில், கடந்த மார்ச் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில், 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 9050 பேர் மெயின் தேர்வுக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. தேர்வானவர்களின் பெயர், பாலினம், பிரிவு என எந்த தகவலும் தரப்படவில்லை. கட் -ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்படவில்லை. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 18 கேள்விகள் தவறானவை. மேலும் தேர்வுகள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த 18 தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது. என டி.என்.பி.எஸ்.சி .யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கோரிக்கை ஏற்காத டி.என்.பி.எஸ்.சி., ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. எனவே, குரூப் 1 தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் நிலுவையில் உள்ளது.
முன்னதாக, தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தது. இதற்கான மதிப்பெண்களை தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் விளக்கமளித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் இன்று இறுதி விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்ந்த விக்னேஷின் மதிப்பெண் பட்டியலை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
31 பதவிக்கான இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 1550 பேர் பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி, தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டும் மனுதாரர் இதில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, தேர்வு எழுதிய ஒருவர் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், இதனை பொது பல வழக்காக கருதி ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.