100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குளை இயக்க அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தெரிவித்தது.
திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக தமிழக அரசு தெரிவித்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவுக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையினரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த தளர்வு அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தது.
100 சதவீத இருக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியது.
கடிதத்தில், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குளை இயக்க தமிழக அரசு வெளியிட்ட அரசானை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள மீறும் செயலாகும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநிலங்களும்/ யூனியன் பிரதேசங்களும் எந்த வகையிலும் நீர்த்துப்போகச் செய்ய கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அறிவிப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.
இந்த அறிவிப்பு, பேரிடர் மேலாண்மை சட்ட விதிக்கு எதிரானது என்று வழக்கறிஞர்கள் தங்கள் முறையீட்டில் தெரிவித்தனர்.
இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக வரும் 11ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
மேலும், தமிழக அரசு உரிய பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் தெரிவித்தனர்.
திரையரங்குகளில் 100% இருக்கை தொடர்பான உத்தரவை ரத்து செய்யுமாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதால், நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வெளியீடு குறித்து பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
முன்னதாக, தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணயம், கூறுகையில், விஜய்யின் மாஸ்டருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும், தியேட்டர்களில்100% இருக்கைக்கான உத்தரவை அரசாங்கம் ரத்து செய்தால், தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் மாஸ்டர் படத்தை திரையிட தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Chennai highcourt injunction against 100 percent occupancy in cinema theatre