10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களால் தான் பார் கவுன்சிலை நடத்த முடியும்: பார் கவுன்சில்

வழக்கறிஞர்கள் பணியில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களால் தான் பார் கவுன்சிலை திறம்பட நடத்த முடியும் என்று பார் கவுன்சில் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது

வழக்கறிஞர்கள் பணியில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களால் தான் பார் கவுன்சிலை திறம்பட நடத்த முடியும் என்றும், இல்லையென்றால் நீதிமன்ற புறக்கணிப்பு போன்று போராட்டங்களால் நீதிமன்ற செயல்பாடுகள் தான் பாதிக்கும் என பார்கவுன்சில் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பார்கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தல் மார்ச் மாதம் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களின் தகுதியை நிர்ணயம் செய்து பார் கவுன்சில் புதிய விதிகளை உருவாக்கி, கடந்த 25 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டது. அதில் 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர்கள் மட்டுமே பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட முடியும் உள்ளிட்ட புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய விதிக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர்கள் செல்வகுமார், முருகேந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் இந்த புதிய விதிமுறையால் 26 ஆயிரம் வழக்கறிஞர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்றும், பார் கவுன்சில் விதிகளை மாற்ற மாநில பார் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை எனவும் வாதாடப்பட்டது. ஆனால் பார் கவுன்சில் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் இடத்திற்கான பதவிகளை வகிப்பவர்கள், நிர்வாக திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும். 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணி அனுபவம் பெற்றவர்களால் தான் இது முடியும். எனவே வருங்காலங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றால் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற வழக்கறிஞர்கள் தான் பார் கவும்சில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பார் கவுன்சிலின் புதிய விதிகளில் தவறில்லையே என கருத்து தெரிவித்தனர்.

பின்னர் வழக்கை நாளை மீண்டும் விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள் விசாரணை தள்ளிவைத்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close