வரதட்சணை புகாரில் பல் மருத்துவரை அரை நிர்வாணமாக காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்திய வழக்கில் பெண் காவலர் உள்பட மூன்று பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மருத்துவர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.
இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் வைகை காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், பல் மருத்துவர் இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் குடும்ப பிரச்சினை காரணமாக என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரை தல்லாகுளம் மகளிர் போலீசில் எனது மனைவி புகார் செய்தார். அந்த புகாரில் 3 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்து வதாக கூறி உள்ளார். அங்கு அப்போதைய பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நிர்மலா, அதை 5 லட்சம் ரூபாய் என்று மாற்றி என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டினார். இந்தநிலையில் திடீரென்று தூத்துக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி ஆகியோர் என் வீட்டுக்கு வந்து என்னையும், மருத்துவரான எனது தாயார் விஜயலட்சுமியையும் தூத்துக்குடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். எனது மனைவி குடும்பத்தினர் முன்னிலையில் போலீசார் என்னை அரை நிர்வாணமாக்கி கிண்டல் செய்தனர். இரும்பு சங்கிலியால் கைகளை கட்டி போட்டோ எடுத்து அவதூறாக பேசி அவமானப்படுத்தினர். போலீசாரின் இந்த நடவடிக்கை மனித உரிமை மீறல் ஆகும். எனவே, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வவிசாரித்த இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை பார்க்கும்போது போலீஸ் அதிகாரிகள் நாகராஜன், நிர்மலா, ஆதிலட்சுமி ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. எனவே, அவர்கள் 3 பேருக்கும் சேர்த்து 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கும், அவரது தாயாருக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து அந்த தொகையை அரசு பிடித்தம் செய்து கொள்ளலாம். போலீஸ் அதிகாரிகள் 3 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். என உத்தரவிட்டுள்ளார்.