ஹெல்மெட் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இருசக்கர வாகன விபத்துக்களில் தலையில் காயம்பட்டு இறந்தவர்கள் எத்தனை பேர் , காயமடைந்து சிகிச்சை பெற்றவர்கள் எத்தனை பேர் போன்ற தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகர ஆணையருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இரு சக்கர வாகனங்களில் பின் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை எனவும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் பின் அமர்ந்து செல்பவர்களில் 100 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் 100 சதவீத வழக்குகள் பதிவாகாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். சென்னை கடற்கரை காமராசர் சாலையில் இன்று பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேர் வேலை செய்யாமல் சாலையின் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க வேண்டாம் என உயர் அதிகாரிகள் காவல்துறையினருக்கு ஏதேனும் அறிவுறுத்தியுள்ளனரா? என கேள்வி எழுப்பினர்.
அதே போல, முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஹெல்மெட் அணியாத காரணத்தினால் இரண்டு காவலர்கள் உயிரிழந்துள்ளதற்கு வேதனை தெரிவித்தனர்.
மேலும், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை சென்னை மாநகர காவல் ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் பயனிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்றால் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்து விசாரணை தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.