சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ள தீட்சிதர்களுக்கு கோவில் வருமானம் தவிர வேறு ஏதேனும் வருமானம் உள்ளதா? கோவிலில் உண்டியல் எப்போது அகற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம், சிதம்பரம் நடராஜர் கோவில் வருவாய் செலவு கணக்கை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் நாட்டில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோவில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்த காலக்கட்டத்தில் 3 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வந்த நிலையில், தற்போது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிதம்பரம் கோவிலில் 2 லட்சம் தான் வருமானம் என்று காட்டப்பட்டுள்து.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, இந்து அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு பிளீடர் வழக்கறிஞர், அருண் நடராஜன், கோவில் தீட்சிதர்களின் கையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை, கோவில் கணக்கில் இல்லாமல், தீட்சிதர்கள் எடுத்துக்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தீட்சிதர்களின் தவறான நிர்வாகமே கோவிலின் வருமானத்தை வெகுவாக குறைத்துள்ளது. இதனால் தீட்சிதர்கள் காலத்தில் வந்த வருமானம் தொடர்பான கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அதே சமயம் தீட்சிதர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. பூஜைகள் மற்றும் அர்ச்சனைக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதால் வருவாய் அதிகரித்ததாக கூறினார்.
மேலும் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் உண்டியல் அகற்றப்பட்டது. பூஜை மற்றும் அர்ச்சனைகளுக்கு கட்டணங்கள் இல்லை. பக்தர்கள் அளிக்கும் காணிக்கைளை தீட்சிதர்கள் எடுத்துக்கொள்வதாக கூறப்படும் குற்றச்சாடடுகள் குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, சிதம்பரம் கோவில் பராமரிப்புக்கும் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் என்ன வருவாய் ஆதாரம் உள்ளது? கோவில் காணிக்கை தவிர தீட்சிதர்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளதா? சிதம்பரம் நடராஜர் கோவிலில் உண்டியல் எப்போது அகற்றப்பட்டது? பூஜை அர்ச்சனை தரிசனத்திற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது இல்லையா? என பல கேள்விகளை எழுப்பினார்.
இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, ஒவ்வொரு ஆண்டும் தீட்சிதர்கள் தரப்பில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு 2014 - 2015 முதல் 2023-2024 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான வருமானம் செலவு குறித்த கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, இந்த வழக்கை வரும் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.