குடிசை மாற்று வாரிய சொத்துக்களை, குடிசை மாற்று வாரியத்துக்கே விற்கும் வகையில், ஒப்பந்த விதிகளில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தை அமைப்பதற்காக அப்பகுதியில் வசித்த குடிசைவாசிகளுக்கு அருகிலேயே மாற்று இடம் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் வீடுகட்டி வசித்துவந்த மைக்கேல் சுகிர்தா என்பரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த தடைவிதிக்கக்கோரி அவரது அதிகாரம் பெற்ற முகவரான (பவர் ஏஜெண்ட்) மரியக்கண்ணு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்திய நாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயம்பேடு சந்தைக்காக எடுக்கப்பட்ட நிலத்தில் மைக்கேல் வசிக்கவில்லை எனவும், அந்த பகுதியில் வசித்த குடிசைவாசிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்போது, அதை சிலர் மூன்றாவது நபர்களுக்கு விற்பனை செய்துவிடுகிறார்கள். இதை தடுக்கும் வகையில் தமிழ் நாடு குடிசை மாற்று வாரியத்திலிருந்து வாங்கும் சொத்துக்களை, குடிசை மாற்று வாரியத்துக்கே விற்பனை செய்யும்வகையில் ஒப்பந்த விதிகளில் திருத்தம் கொண்டுவரவேண்டுமென நீதிபதி வைத்திய நாதன் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.