ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படங்களை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தொடர்ந்த வழக்கு பொது நல நோக்குடன் இல்லை என கூறி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
ரூபாய் நோட்டுகளில் கிறுக்கப்படுவது, கள்ளநோட்டு அச்சிடப்படுவது, சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தபடுவதால் மகாத்மா காந்தி படம் அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு, அரசியலமைப்பு சட்டவிதிகளின் கீழ் முழுமையாக ஆராய்ந்து, விதிகளுக்கு உட்பட்டே காந்தியடிகள் படம் அச்சிடப்படுவதாகவும், இதுபோன்ற வழக்கை பொது நல வழக்காக ஏற்க முடியாது என கூறி முருகானந்தம் மனுவை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்தனர்.