மணல் குவாரி தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அரசுக்கு எதிரான வழக்கு என்றால் ஆவணங்களை தாக்கல் செய்வதில் தாமதப்படுத்துவது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்படுகிறது எனக் கூறி, அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் நேரடியாக சோதணை நடத்தியது. இது தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீர்வளத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பொதுத் துறை செயலாளரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று (நவ 28) நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், பொதுத்துறை செயலாளர் இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தனர். இதனால், இன்று (நவ 29) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுத்துறைச் செயலாளர் ரீட்டா ஹரிஸ் தாகூர் நேரில் ஆஜரானார். அவரது தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவிந்தரனும் ஆஜராகி இருந்தார்.
அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கு ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தும் ஏன் அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை?“ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், “இந்த வழக்கில் யாரும் ஆஜராகாமல் இருந்து விட்டனர். இது தவறாகிவிட்டது. எனவே மன்னிப்பு கோருகிறோம்” எனத் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “இதே நிலை தொடர்ந்து நடைபெறுகிறது. அரசுக்கு ஆதரவான வழக்கு என்றால் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்கிறீர்கள். ஆனால், அரசுக்கு எதிரான வழக்கு என்றால் மேல்முறையீடு செய்து விசாரணையைத் தாமதப்படுத்துகிறீர்கள்.
இதே போன்றுதான் எல்லா வழக்கிலும் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கல்வித்துறையில் இது போன்ற ஏராளமான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போது அடிக்கடி வாய்தா கேட்கப்படுகிறது. சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறி அடிக்கடி வாய்தா கேட்பதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ. 1100 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், சாமானியனாக இருந்தாலும் சரி, சமமாக கருதப்படுவார்கள்.
இது போன்று நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜராகாமல் இருப்பதன் மூலம் தேவையில்லாத காலச் செலவு மற்றும் பொருட் செலவு ஏற்படுகிறது” எனத் தெரிவித்தனர். இதையடுத்து, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மீண்டும் மன்னிப்பு கோரினார். அதன்பேரில், இதே நிலை மேலும் தொடராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.