108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் 4750 ஊழியகள் பணியாற்றி வருகின்றனர். இந்த போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள் என்பதால், ஆம்புலன்ஸ் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடைவிதிக்கவும், சட்ட விரோதமானது என்றும் அறிவிக்கவும் கோரி சேலம் ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்த செல்வராஜன் என்பவர் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்:
மேலும் அவர் தனது மனுவில், ஏற்கனவே கடந்த 2014, 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையின் போது ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தை சட்ட விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுத்துள்ள நிலையில் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் என்பது சட்டவிரோதமானது எனவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள் இந்த பிரச்சனை என்பது தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப் படுவதாகவும் எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் தவறானது எனவும் எனவே இதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் உத்தரவிட்டனர். மேலும் மனு தொடர்பாக ஊழியர் சங்கங்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்