போக்குவரத்து ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பு!

அரசு துறை சார்ந்த பணியாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் உள்ள பிரச்சனையை, பொதுநல வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் சிஐடியு, ஏஐடியுசி போன்ற தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. நீதிமன்ற உத்தரவினால் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் போராட்டத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சி ஐ டி யு, ஏ ஐ டி யு போன்ற சங்க ஊழியர்களிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த ஜனார்த்தனன், முத்துக்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், கடந்த ஜனவரி 4 ஆம் முதல் 11 ஆம் தேதி வரை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதற்கு சிஐடியு மற்றும் ஏஐடியுசி போன்ற சங்கங்களே காரணம் எனவும் தெரிவித்திருந்தார். எனவே அரசுக்கு ஏற்பட்ட இழப்பை போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடமிருந்து பெற உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதார் நேரில் ஆஜராகி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் அரசின் வருவாய் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு கோடிக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இழப்பை சம்மந்தப்பட்ட தொழில் சங்கத்திடம் இருந்து வசூலிக்க வேண்டும் என கோரி, அரசுக்கு கடந்த மாதம் ஒரு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அந்த மனு மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக இழப்பீட்டை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு துறை சார்ந்த பணியாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் உள்ள பிரச்சனையை, பொதுநல வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது. இதே போல், பல்வேறு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றமும் இது தொடர்பாக தீர்ப்புகளை வழங்கி இருப்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

×Close
×Close