வேறு ஒருவருடன் பழக எதிர்ப்பு தெரிவித்த கள்ளக்காதலனை, இட்லியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்ற கிரைம் சுரேஷ். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முன்னாள் ரவுடியான இவர், தற்போது ஆட்டோ ஓட்டிவருகிறார். இவர், கடந்த 14ம் தேதி காணவில்லை என்று அவரது தாயார், அம்பத்தூர் காவல் துணை ஆணையர் அலுவலகத்திலும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மாறி மாறி புகார் அளித்து வந்தார். இந்நிலையில் 6 நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை, பாடி அருகில் சுரேஷின் ஆட்டோ மட்டும் நின்றது. சுரேஷின் நண்பர் மூலமாக இந்த தகவல் அவரது தாயாருக்கு கிடைத்தது.
ஆட்டோ மட்டும் தனியாக நிற்பதாக சுரேஷின் தாயார் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். மேலும், பாடி கலைவாணர் நகரில் உள்ள அம்மா உணவகம் அருகில் இட்லி கடை நடத்தி வரும் 29 வயதான அம்மு என்ற கார்த்திகா மீது சந்தேகம் இருப்பதாகவும் சுரேஷின் தாயார் தெரிவித்துள்ளார். இதை அடுத்து அம்முவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அம்மு கூறினார்.
6 ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் பிழைப்புக்காக புதுக்கோட்டையிலிருந்து சென்னை வந்துள்ளார் அம்மு. அப்போது சுரேஷ் உடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து பாடி பகுதியில் அம்முவுக்கு இட்லி கடை வைத்துக்கொடுத்துள்ளார் சுரேஷ். நாள்தோறும் அம்முவின் இட்லி கடையில்தான் இரவு உணவையும் சாப்பிட்டு வந்தார். இருவருக்கும் இடையிலான இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை தட்டிக் கேட்ட தனது தாய்மாமனையே கொலை செய்ததாக சுரேஷ் மீது தற்போது வரை வழக்கு நிலுவையில் உள்ளது.
அம்மு உடனான தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்ததால், சுரேஷின் தாயார் கலா 8 மாதங்களுக்கு முன்னர் பாடியிலிருந்து வீட்டை மாற்றி கொளத்தூருக்கு குடி பெயர்ந்தார். ஆனாலும் பாடியில் உள்ள அம்முவின் கடையில்தான் இரவு உணவை சாப்பிடுவதை சுரேஷ் வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இட்லி கடையில் சாப்பிடும் போது, அங்கு வந்த ஒருவரிடம் அம்மு சிரித்து சிரித்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கடையிலேயே அம்முவிடம் சண்டை போட்டுள்ளார். மேலும், கடையில் இருந்த கத்தியை எடுத்து அம்முவின் தொடையில் குத்தியும் மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அம்மு தனது கணவர் ஜெயகொடியிடம் நடந்ததை கூறியுள்ளார். அவர் தனது நண்பர்கள் ராஜா சுந்தரகாண்டம் ஆகியோருடன் சேர்ந்து சுரேஷை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.
பின்னர் 14-ம் தேதி இரவே சுரேஷை வீட்டுக்கு வரவைத்த அம்மு, மயக்க மருந்து கலந்த இட்லியை கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சுரேஷ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதை அடுத்து அவரை வீட்டிலேயே அடித்து 4 பேரும் சேர்ந்து கொலை செய்தனர் . பின்னர் அவரது ஆட்டோவிலேயே உடலை ஏற்றி பாடிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு ஒரு காரில் உடலை ஏற்றி செங்குன்றம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள முட்புதருக்கு கொண்டு சென்றனர். அங்கு சுரேஷின் கழுத்தை அறுத்து உடலை தனியாகவும், தலையை தனியாவும் வீசிவிட்டு திரும்பியது விசாரணையில் தெரிய வந்தது. இதை அடுத்து அம்மு, அவரது கணவர் ஜெயக்கொடி, கொலைக்கு உடந்தையாக இருந்த ராஜா, சுந்தரகாண்டம் ஆகிய நால்வரை கொளத்தூர் போலீசார் கைது செய்தனர். உடலை எடுத்துச் சென்ற ஆட்டோ மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதனிடையே செங்குன்றம் போலீசார் வடபெரும்பாக்கம் அருகே வீசப்பட்ட சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுரேஷின் தலையை கொளத்தூர் மற்றும் செங்குன்றம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.