New Update
00:00
/ 00:00
தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பெரும்பாலான உணவு விடுதிகளில் சுகாதார சீர்கேடு அம்பலமாகியிருக்கின்றது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு பிரபல உணவு விடுதியில், ஏற்கனவே, வாடிக்கையாளர்கள் சுவைத்துவிட்டுப் போட்ட எலும்புகளை சேகரித்து மீண்டும் ஆட்டுக்கால் பாயா தயாரித்திருந்ததை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சம்பவம் நடந்தது.
இந்தநிலையில், சென்னை பூந்தமல்லியில் இயங்கி வரும் பிரபலமான உணவு விடுதிக்கு நேற்று மாலை உணவருந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார். தனக்கு வேண்டியதை எல்லாம் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்ததும், கடைசியில் பயங்கரமாக கத்தி இருக்கிறார்.
இதனால் பதறியடித்து வந்த கடை உரிமையாளரிடம், தட்டை தூக்கி காட்டி, "உள்ள என்ன இருக்குனு பாருங்க" என கேட்டுள்ளார். அவர் பார்த்தபோது தட்டில் கொத்தாக முடிகள் விழுந்து கிடந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர், ".. கோபப்படாதீங்க.. இது எப்படி வந்தது தெரியல.. நான் உங்களுக்கு புதுசா கொண்டு வர்றேன்" எனக் கூறியிருக்கிறார்.
ஆனால், அந்த இளைஞர் தொடர்ந்து வசைபாடி உள்ளார்.
அப்போது உரிமையாளர், கொஞ்சம் அமைதியா இருங்க சார், நான் வேறு உணவு தரேன், நீங்க காசு கூட கொடுக்க வேணாம்ன்னு பேச, இதான் சாக்கு என்று அந்த இளைஞரும் பறந்து விட்டார்.
இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர் கிச்சனில் சென்று ஊழியர்களை எச்சரித்துவிட்டு பிறகு அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதில், சற்றுமுன் ஏகத்துக்கு வசைபாடிய இளைஞர் தனக்கு வேண்டியதையெல்லாம் சாப்பிட்டு விட்டு கடைசியாக கொஞ்சம் மீதி இருந்த உணவில் தனது தலையில் உள்ள முடியை தானே கொத்தாக பிய்த்து போட்டு கிளறியது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த உணவு விடுதியின் உரிமையாளர் அந்த காட்சியினை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று இளைஞர் மீது புகார் கொடுத்தார்.
இந்த சம்பவம் தற்போது வைரலாகியிருக்கின்றது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.