சென்னை ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்தினர்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
படிப்பில் சிறந்து விளங்கிய பாத்திமா, ஒரு பாடத்தில் மட்டும் மதிப்பெண் குறைந்ததற்காக, தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை பாத்திமாவின் பெற்றோர் ஏற்கவில்லை. தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பாத்திமாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மாணவியின் தற்கொலை தொடர்பாக பேராசிரியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாத்திமா மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. பாத்திமா குற்றம்சாட்டிய பேராசிரியர்களிடம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை வாக்குமூலத்தை பெற்றுள்ளது.
தமிழக காவல்துறையினர் விசாரிக்கும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என வலியுறுத்தி கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் பாத்திமாவின் பெற்றோர் மனு அளித்துள்ளனர். பெற்றோரின் இந்த பரபரப்பு தகவலால் கேரளா மட்டுமல்லாமல், தமிழகமும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.