சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் மாணவர்களுக்கு அனுமதியின்றி தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. புகாரின் அடிப்படையில் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது மனிதர்கள் எந்த அளவுக்கு சோதனையை தாங்குகிறார்கள் என்பதை அளவிடுவதுதான் தாங்கு திறன் சோதனை எனப்படுகிறது.
அந்த வகையில் வனவாணி பள்ளியில் மாணவர்களை ஓட வைத்து அவர்களுக்கு எவ்வளவு வியர்க்கிறது, வெளியேறும் வியர்வையின் அளவு என்ன என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், சோதனைக்காக வியர்வை எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், மாணவர்களுக்கு மாத்திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை பள்ளி நிர்வாகம் மறுத்திருக்கிறது. மேலும், மாணவர்களுக்கு மருந்து, மாத்திரை எதுவும் வழங்கப்படவில்லை. இனி வரும் காலங்களில் பெற்றோரின் அனுமதியின்றி இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படாது. உரிய அனுமதி பெறப்படும் என பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். மீண்டும் அவர் பணிக்கு வரும்போது வேறு இடத்திற்கு மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய முதல்வராக பிரின்சி டாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மாணவர்களுக்கு அனுமதியின்றி தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக எழுந்தப் புகாரில், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் வருகிற 6 ஆம் தேதி ஆஜராக தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“