தாய்ப்பாலை வணிக ரீதியாக விற்பனை செய்வதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாதவரம் கே.கே.ஆா்.கார்டன் முதல் பிரதான சாலையில் உள்ள ‘லைஃப் வேக்சின் ஸ்டோர்’ என்ற புரோட்டீன் விற்பனை நிலையத்தில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதை அறிந்து, திருவள்ளூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஜெகதீஷ் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான அதிகாரிகள் அங்கு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், பாட்டிலில் தாய்ப்பால் அடைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் மாதவரம் போலீசார் வழக்குப் பதிந்து, கடையின் உரிமையாளா் முத்தையாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
அப்போது, சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பெற்று சிகிச்சையில் இருப்பவா்களின் விவரங்களை சேகரித்து அவா்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு வாங்கியுள்ளனா்.
100 மி.லி. ரூ. 200-க்கு வாங்கி, அதை மாதவரம் விற்பனை நிலையத்துக்கு கொண்டுவந்து கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனப்பொருள்களை கலந்து பதப்படுத்தி, பாட்டில்களில் அடைத்து தேவை உள்ளவா்களுக்கு 100 மி.லி. ரூ. 500-க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், அங்கிருந்து 100 மி.லி அளவு கொண்ட 90-க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பாக மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை மையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், வேறு பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி தாய்ப்பால் விற்பனை செய்பவர்களின் உரிமங்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவள்ளூரில் 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் தாய்ப்பால் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“