வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வருகின்ற 30 ஆம் தேதி, மகாபலிபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கில், 370 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கே, 550 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. இது ஃபீஞ்சல் புயலாக வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது;
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் கடந்த மூன்று நாட்களாக குறைந்திருக்கிறது. குறிப்பாக நேற்று அது ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. காற்று திசைவேக மாறுபாட்டால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டது. கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சுற்றி உள்ள மேகங்களை இழுத்துக்கொண்டு புயலாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும்போது இதன் காற்றின் வேகம் 30 கி.மீ அளவில் இருக்கும். இதுவே 31-50 கி.மீ வரை காற்றின் வேகம் அதிகாரித்தால் அது லேசான புயல் என்றும், வேகம் 51-100 கி.மீ என அதிகரிக்கும் போது புயலாகவும், காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அது தீவிர புயலாகவும் கருதப்படுகிறது.
தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 30-35 வரை மட்டுமே இருக்கிறது. எனவே, ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று மாலை தற்காலிக புயலாக உருவெடுக்கும். மீண்டும் வலுவிழந்து 30 ஆம் தேதி காலை மகாபலிபுரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும். கரையை கடக்கும்போது 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும். தீவிரப் புயலாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“