தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் மத்திய கிழக்கு அரபிக்கடலில் 21-ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது வடக்கு திசையில் நகரக்கூடும். தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
இந்நிலையில், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பெய்துள்ளது. சேலம் மேட்டூரில் 10 செ.மீ, கெலவரப்பள்ளி அணையில் 9 செ.மீ, நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 8 செ.மீ மழை பெய்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதியில், 22ம் தேதி வரை மணிக்கு, 45 முதல், 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ்பக்கத்தில், “மே மாதத்தில் கடற்பகுதியில் இருந்து மழை மேகங்கள் வரும் அரிதான நிகழ்வு நடந்து வருவதாகவும், இதன் காரணமாக சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு தொடர் மழை இருக்கும் என்றும், இதையடுத்து மழை தீவிரமடைந்து மீண்டும் தொடர்ந்து மழை பெய்யும்” என தெரிவித்துள்ளார்.