இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸின் தொட்டிலாக நீண்ட காலமாக கருதப்படும் சென்னை இந்த வார இறுதியில், நாட்டின் முதல் நைட் ஸ்ட்ரீட் ரேஸ் பந்தயத்தை நடத்துகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சார்பில் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம், வரும் ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்த உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மொத்தம் 3.5 கி.மீ. சுற்றளவு உடைய சர்க்யூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது.
இந்த சர்க்யூட் தீவு திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் ஆகும்.
இதற்காக சாலையின் இருபுறங்களிலும் கார் பந்தயதுக்கு ஏற்றவாறு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, மன்றோ சிலை சாலையில் பார்வையாளர்கள் மேடையில் அமர்ந்து இந்த பந்தயத்தை கண்டுகளிக்கும் விதமாக மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் மூன்றாவது சுற்று கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் உள்ள காரி மோட்டர் ஸ்பீட்-வேவில் செப்டம்பர் 13 முதல் 15 வரை நடைபெறுகிறது. நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்று அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கோவா, கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் ஐந்து சுற்றுகளை கொண்ட இந்த கார் பந்தய திருவிழாவில் முதல் மூன்று சுற்று தமிழ்நாட்டில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“