வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதன் காரணமாக, சென்னையில் இன்று காலை வரை கடுமையான மழை பெய்தது. சிட்லபாக்கம், அடையாறு உள்ளிட்டப் பகுதிகளில் பல வீடுகளில் கழிவு நீருடன் மழை நீரும் உள்புகுந்துள்ளது. இந்த தண்ணீரை அகற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மழை நீர் வெளியற்றப்படும் பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
இதையடுத்து, மழை வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் ஜெயக்குமாருடன் சென்னை மாநகராட்சியில் அமைச்சர் வேலுமணி ஆய்வுக் கூட்டம் நடத்தினர். அப்போது, சென்னையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த 2015ல் பெய்த மழைக்கும் இந்த மழைக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் அனைத்து ஊடகங்களையும் குறை சொல்லவில்லை, ஆனால் சில தொலைக்காட்சிகள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுகிறது. உங்களது ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும். நாங்கள் செய்கிற வேலையை நன்றாக செய்து முடிக்கிறோம். கடந்த சென்னை வெள்ளத்தின் போது நாங்கள் செய்த பணிகள் பாராட்டப்பட்டது.
முடிச்சூர் பகுதியில் பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆறு, கூவம் ஓரத்தில் இருந்த 5 ஆயிரம் வீடுகள் அகற்றப்பட்டு வேறு இடத்துக்கு அந்த மக்களை அமர்த்தியிருக்கிறோம். சென்னையில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதிகாலை மூன்று மணி வரை ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறோம். மழை நீர் தேங்கிய 49 இடங்களிலும் நீர் அகற்றப்பட்டுவிட்டது" என்று கூறினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், மழை நீர் தேங்கியிருப்பது குறித்த ஆதாரத்தை காட்டி கேட்ட கேள்வியால் ஆவேசமடைந்த அமைச்சர் வேலுமணி, "அமெரிக்கா, லண்டன் நகரங்களில் தேங்கும் மழை நீர் அளவு கூட சென்னையில் தேங்கவில்லை. அமெரிக்கா, லண்டன், பெங்களூருவில் எடுக்கப்பட்டதைவிட சென்னையில் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டோம்" என்று கூறினார்.
செய்தியாளர்கள் தொடர்ந்து, மழை தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கமுடியவில்லை என்று கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், "தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை ஏதோ தவறு மாதிரி திசை திருப்புகிறார்கள். இரண்டு மணி நேரத்தில் இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விடும்" என்றார்.