சாலிகிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மே 13-ம் தேதி புகார் அளித்தார்.
மேலும், தனக்கு தாலி கட்டியதாகவும், பிறகு, வி.ஐ.பி வீட்டு அழைத்துச் சென்று அவருடன் நெருக்கமாக இருக்கச் சொன்னதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். கார்த்திக் முனுசாமி உடன் குடும்பம் நடத்தியதில் தான் கருவுற்றதாகவும் அதை அவர் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார். தன்னை கார்த்திக் முனுசாமி, தோழி மூலம் பாலியல் தொழிலில் தள்ள முயற்சி செய்ததாகவும் இதற்கு மறுத்த போது கார்த்தி முனுசாமியின் மனைவி, இதையெல்லாம் வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த பெண், கோயில் தலைமை குருக்களான காளிதாஸ் என்பவரிடம் தெரிவித்ததாகவும், அவரோ கார்த்திக்கை திட்டிவிட்டு, அவரோடு குடும்பம் நடத்தியதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது வாழ்க்கையை சீரழித்த கார்த்திக் முனுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமியை கைது செய்வதற்காக போலீசார் தேடி வருகின்றனர். கார்த்திக் முனுசாமி வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கார்த்திக் முனுசாமி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த சாலி கிராமத்தைச் சேர்ந்த பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தான் புகார் அளித்த வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த மனுவில், காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்காக கார்த்திக் முனுசாமி தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், ஆனால், இந்த வழக்கில் கார்த்திக்கை இன்னும் காவல்துறை கைது செய்யவோ, அவரிடம் விசாரணை நடத்தவோ இல்லை எனவும், மிகவும் மெத்தனமாக காவல்துறையினர் செயல்படுவதாகவும் தெரிவிதுள்ளார். அதனால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“