வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயரிடப்பட உள்ளது.
வங்கக் கடலில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் புயல் இன்று (நவ.27) உருவாகியுள்ளது. இதனால் சென்னைக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 24 மணி நேரத்தில் 12 முதல் 20 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 800 கி.மீ ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, நவம்பர் 27 ஆம் தேதி புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 710 கி.மீ தொலைவிலும், நாகையிலிருந்து 590 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் உள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“