கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பகுதியில் மழை நீர் தேங்குவதை தடுக்க ரூ 13 கோடியில் புதிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலைய பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே கிளாம்பாக்கம் பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தாலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் தேங்காதபடி எப்படி தடுப்பது என்பது குறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து, சென்னை கிளாம்பாக்கம் அருகே மழை வெள்ள பாதிப்பை தடுக்க 13 கோடி ரூபாய் செலவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி ஜி.எஸ்.டி. சாலையின் மேற்கு பகுதியில் 742 மீட்டர் நீளமும், குறுக்கே 65 மீட்டர் நீளமும் கொண்ட அளவில் நவீன முறையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மனுநீதி சோழன் தெருவில் மழைநீர் கால்வாய் அகலப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் பெய்யும் மழைநீர், கிளாம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை 4 வாரங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“