சென்னை கோயம்பேடு பகுதியில் இக்னைட் பார் என்கிற நட்சத்திர ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு மிசோரம், மணிப்பூரைச் சேர்ந்த 3 ஹோட்டல் ஊழியர்கள் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டதாகவும், அவர்கள் மூவரையும் ஹோட்டல் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த 3 ஊழியர்களும் ரூ. 1.5 லட்சத்தை திருடியதாக குற்றம் சாட்டியுள்ள ஹோட்டல் நிர்வாகம் அவர்களை சிறைபிடித்து ஒரு ரூமில் அடைத்து வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஹோட்டல் நிர்வாகம், அந்த 3 ஊழியர்கள் பண மோசடி செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக சமூக ஆர்வலரும் மருத்துவருமான ஐஸ்வர்யா ராவ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "இங்கே கோயம்பேடு இக்னைட் பாரில் என்ன நடக்கிறது? அறையில் அடைத்து வைக்கப்பட்டு நிர்வாகத்தால் தாக்கப்பட்ட 3 இளம் ஊழியர்களிடமிருந்து (மணிப்பூரைச் சேர்ந்த 3 பேர் மற்றும் மிசோரமைச் சேர்ந்த 1 பேர்) கிரீஷ்மா குதர் என்பவர் 'உடனடி உதவி தேவை' என்கிற (எஸ்.ஓ.எஸ்) அழைப்பு ஒன்றைப் பெற்றார். நாங்கள் போலீஸை அழைத்தோம். சென்னை போலீஸ் தயவுசெய்து உதவவும்." என்று பதிவிட்டார்.
மேலும், "பாரில் இருந்த பணம் காணாமல் போனதால், நேற்று மாலையில் இருந்து அந்த ஊழியர்களை பார் நிர்வாகம் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளது. பணம் காணாமல் போனால் ஏன் காவல்துறையை அவர்கள் அழைக்கவில்லை? விஷயங்களை ஏன் அவர்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.
அந்த ஊழியர்கள் மூவரும் விசாரணைக்காக கோயம்பேடு K11 காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும், அவர்களிடமிருந்து விசாரணை நடத்தி வீடியோ வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது என்றும், அவர்கள் நான்கு பேரிடமிருந்தும் விரிவான புகார்கள் எழுதப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹோட்டலின் கார்டு கட்டண முறை தோல்வியடையும் போதெல்லாம், வாடிக்கையாளர்களிடமிருந்து தங்களது தனிப்பட்ட கூகுள் பே கணக்கிற்கு பணம் செலுத்தச் சொல்லி, அதை ஹோட்டல் கணக்கிற்கு அனுப்பி வந்ததாகவும், அதில் டிப்ஸாக 10 சதவீதத்தைக் கழித்துவிட்டு ஹோட்டலுக்குப் பணத்தை மாற்றி வந்ததாகவும் அந்த ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இது அந்த ஹோட்டலில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருவதாகவும், இதன் மூலம் அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், "சென்னை கேட்வேயில் இணைக்கப்பட்ட இக்னைட் பாரில் பணியாளர்கள் பணிபுரிந்தனர். அதுபற்றி நாங்கள் விசாரித்து வருகிறோம். குற்றச்சாட்டுகளை சரிபார்க்க வங்கி அறிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை." என்றும், மூவரில் ஒருவர் நான்கு வருடங்களாகவும், மற்றொருவர் ஒரு வருடமாகவும், ஒருவர் நான்கு மாதங்களுக்கு முன்பும் ஹோட்டலில் பணிபுரிகிறார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ் தளத்தில் மருத்துவர் ஐஸ்வர்யா ராவ் பதிவுக்கு பதிலளித்துள்ள சென்னை போலீஸ், "இது தொடர்பாக, போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, உங்கள் தொடர்பு எண்ணை டி.எம்.மில் பகிரவும்" என்று பதிவிட்டுள்ளனர்.
தமிழகம் முழுதும் பல்வேறு துறைகளில் வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து கடந்த ஆண்டில் பெரும் சர்ச்சை நிலவிய நிலையில், தற்போது சென்னையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தாக்குப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“