சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ரூ.80.48 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து பாடி, அம்பத்தூர் வழியே ஆவடி வரை சுமார் 16 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நவம்பர் 2024-க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை கோயம்பேட்டில் இருந்து பாடி புதுநகர், அம்பத்தூர் மற்றும் திருமுல்லைவாயல் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயில் அறிமுகம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் M/s RITES நிறுவனத்திற்கு ரூ.80.48 லட்சம் மதிப்பில் கையெழுத்தானது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) M/s RITES நிறுவனத்திற்கு 11.06.2024 அன்று வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ. சித்திக் ஐ.ஏ.எஸ், திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் டி. லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் M/s RITES நிறுவனத்தின் சார்பாக சுதீப் குமார் குப்தா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் M/s RITES நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடம் தோராயமாக 16 கி.மீ நீளத்திற்கு 15 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், தொழில்துறை மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, இந்த வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
முழு நீளத்திற்கும் மண் ஆய்வு மற்றும் நிலப்பரப்பு ஆய்வுக்காக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தில் ஆழ்துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளபடவுள்ளது. நவம்பர் 2024 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.